Wednesday, February 5, 2014

இந்திரா சௌந்தர்ராஜன்


அகில் என்றால் சந்தனம் என்று பொருள். சஞ்சதம் எப்படி மணக்குமோ அப்படியே அகிலின் எழுத்துச்சாரம் மணக்கிறது. கூடவே சில கதைகளை வாசித்த பிறகு நெஞ்சம் கனக்கிறது.

இந்தியதேசம் தனது சுதந்திர போராட்ட காலத்தை 1947ல் முடித்துக் கொண்டது. 65 ஆண்டு காலம் ஒடிவிட்டது. இதில் இப்பொழுது இருப்பவர்கள் எவருக்குமே போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது. இந்திய மண்ணில் அங்கும் இங்குமாய் கலவரங்கள் நடந்திருக்கலாம். பாகிஸ்தானோடு எல்லை புரத்தில் சில யுத்தங்களை இந்த நாடு சந்தித்திருக்கலாம்.

 
ஆனால் அதன் தாக்கம் என்று எதுவும் பாரத மக்களிடம் கிடையாது. அதனால் ஒரு மனித உயிரின் மதிப்பை ஏத்த சுத்தமாய் உணரும் வாய்ப்பே இல்லாமல் இங்குள்ள எம்மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

 
அதிலும் 1990க்கு பின் பிறந்து வளர்ந்து வருபவர்கள் டிவி, செல்போன், லேப்டாப் என்கிற வசதிகளோடும் இதெல்லாம் காலகாலமாக இருப்பது போலவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

 
இன்றைக்கு பின் மக்களுக்கு தூரம் என்பது ஒரு பொருட்டில்லை. விமானப்பணம் கூட ஒரு பஸ்பயணம் போல விமானநிலையத்துக்கென்று டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணிக்க முடிந்த ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. காதுகள் கூட இல்லாமல் இருக்கத்தயார். ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க ஒருவரும் தயாரில்லை.
மேற்கத்திய நாகரீக தாக்கங்களும் அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் தமிழக எல்லையில் இருந்து ஒரு பெரிய கவலை இன்னும் உருவாகவில்லை.
அகில் எழுத்துக்களை வாசிக்கையில் என்னுல் அந்த கவலை பலமடங்கு அதிகரிக்கிறது. இத்தனைக்கும் சில கதைகளே இலங்கை நிலைப்பாட்டை பிரதிபலித்தன. பல கதைகள் வாழ்வியல் கூறுகளையே காட்டின. இருந்தாலும் அந்த சில கதைகளில் தெரிந்த விஷயங்கள் நெஞ்சைக் கலக்கி விட்டது. குறிப்பாக கூடுகள் சிதைந்தபோது கதையை சொல்லலாம். அடுத்து 'வலி" என்னும் சிறுகதை.

 
பன்றிகளோடு பன்றியாய் பயணிக்கும் அகதிக்தனம் மனதை பதைக்க வைத்தது. எந்த மனிதனுக்கும் இப்படி எல்லாம் நிகழக் கூடாது.. இப்படி எண்ணவைப்பது தானே நல்ல சிறுகதையின் சிறப்பு?

 
எட்வின் போ என்னும் மேல்நாட்டு சிந்தனையாளர் சிறுகதைகள் பற்றி குறிப்பிடும் போது ஒரு சிறுகதை என்பது மிதக்கும் பெரிய பனிக்கட்டியை போன்றது என்கிறார். அதன் வெளியில் தெரியும் பாகம்; குறைவு - தண்ணீருக்குள் இருக்கும் பாகம்; அதிகம். அதைபோல் சிறுகதையும் வடிவில் சிறிதாக இருந்தாலும் உள்ளடக்கம் அதனுள் பெரியதாக இருந்து தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.

 
இன்னொரு சிந்தனையாளரோ சிறுகதை என்பது ஒரு சாவித்துவாரம் வழியாக ஒருஅறைக்குள் நடப்பதை பார்பதை போன்றது என்கிறார். சிறுகதைகள் பற்றி இப்படி பல்வேறு கருத்துக்கள்......
இதை எல்லாம் உணர்ந்தும் உள்வாங்கியும் அகில் என்கிற அகிலேஸ்வரன் கதைகள் செய்ததாக தெரியவில்லை. இவைகளுக்கு அவசியம் இல்லாதபடி இயல்பாக கதைகள் அவருக்குள் ஜனித்திருப்பது போல் தான் எனக்கு  தோன்றுகிறது.
 
ஒரு கதையின் நீள அகலம் கூட அதன் கருப்பொருளில் தான் உள்ளது. நிறைய சொல்லவேண்டியதை வேண்டுமானால் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கலாம். ஆனால் சுருக்கமான ஒன்றை நீட்டி முழக்க முடியாது.
 
வில்போலும் ஒரு கதை நம்மை இழுக்கவேண்டும். நாம் அதை ஒரு போதும் இழுக்கக் கூடாது. இழுத்தால் இழுத்தது தெரிந்து பெரிதும் விகாரம் தட்டி கதையும் சிதைந்து விடும்.

 
அகிலிடம் இம்மட்டில் குழப்பமே இல்லை. கதையை கருப்பொருளின் குணத்திற்கு ஏற்ப கையாண்டிருக்கிறார். அதனால் சில கதைகள் நீளமாயும், சில சுருக்கமாயும் தானாகவே அமைந்து விட்டன. உறுத்தல் கதையை உதாரணமாகச் சொல்லலாம்.

 
மேலும் இக்கதைகளினுடே என்னால் ஈழத்து மக்களின் கலாசார பழக்க வழக்கங்களையும் ஒரளவு என்னால் உணர முடிந்தது. இன்னமும் நற்றமிழ் சாகமல் இருப்பது ஈழத்தில் தான் என்பதும் புரிந்தது.

 
அகில் இதுபோல் நிறையமுயல வேண்டும். அவரது நாவல் ஒன்றை நான் வாசிக்க வேண்டும் என்வரையில் அகில் தமிழ்படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத ஒருவர். தன்னை முன்னிறுத்தும் முந்திரிக் கொட்டைத்தனமில்லாத  சிலர் முயல்வுகள் பெரிதும் பாராட்டுக்குரியவை.

 
ஒரு பண்டைத்தமிழனாய் பாரதத்தமிழனா இந்த ஈழத்தமிழனை யாதும் ஊரே யாவரும் கேளிர் நோக்கோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.
                              
   

No comments:

Post a Comment