Wednesday, February 5, 2014

விமர்சனம் - தினமணி


 - கலாரசிகன்சாப்பசிவம் அகிலேஸ்வரன் என்கிற 'அகில்". எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய அரசின் விருது வழங்கும் விழாவில்தான் அவரைச் சந்தித்தேன். 'பிரியமுடன் அகில்" என்று கையொப்பமிட்டு அவர் எழுதிய 'கூடுகள் சிதைந்தபோது" என்கிற சிறுகதைத் தொகுப்பை என்னிடம் தந்து, 'நீங்கள் இதைக் கண்டிப்பாகப் படித்துவிட்டு கருத்துக் கூற வேண்டும்" என்று தனக்கே உரிய யாழ்ப்பாணத் தமிழில் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ் மாவட்டம் சரவணை ஊர்காவற்றையில் பிறந்த அகில் இப்பொழுது கனடா வாசி, அடிக்கடி சென்னை வந்து போகிறார். 'திசைமாறிய தென்றல்", 'கண்ணின் மணி நீ எனக்கு" என்று ஏற்கனவே இரண்டு நாவல்களைப் படைத்திருக்கும் இவர்

www.tamilauthors.com என்கிற இணையத்தளத்தையும் நடத்தி வருவதாக அவரைப் பற்றிய தன்குறிப்பு கூறுகிறது.
 
'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படித்தபோது ஒன்று தெரிந்தது. பூகோளப் பிரிவுகளால் தமிழனின் அடிப்படை உணர்வுகள், ஏன் இந்திய நாகரியத்தின் அடிப்படை உணர்வுகள் மாறுபடுவதில்லை என்பதை ஒவ்வொரு கதையும் உணர்த்தியது. நெஞ்சிலே ஈரம், மனதிலே பாசம், அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகள் இவை தாயகத் தமிழனுக்கும், புலம் பெயர்ந்த தமிழனுக்கும் வேறு வேறல்ல என்பதை அத்தனை கதைகளும் தௌ;ளத் தெளிவாக உணர்த்தின.
சிங்களவரான பிரிகேடியர் சில்வா மேஜர் ஜெனரல் சில்வாவாகப் பதவி உயர்வுபெறப் பல தமிழர்களின் உயிர்களைப் பலி வாங்கி இருந்தாலும் அவரது மகன் அசோக தனது தமிழ் நண்பனைக் காப்பாற்றி தனது உயிரைக் காவு கொடுத்த கதையைப் 'பதவி உயர்வு" சிறுகதையிலும், தனது தாயை முதியோர் இல்லத்துக்குப் கொண்டுபோய் விடத் தீர்மானிக்கும் மகனின் மனநிலையை 'உறுத்தல்" சிறுகதையிலும் விவரிக்கும் விதம் அகில் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளர் என்பதை உணர்த்துகின்றன.
 
தாயகத் தமிழ் பத்திரிகைகளும், வாசகர்களும் ஒரு மிகப் பெரிய தவறிழைத்துக் கொண்டிக்கிறோம். யாழ்ப்பாணத் தமிழ் நடையில் யதார்த்தமாக எழுதப்படும் படைப்புகளுக்கு நாம் ஏனைய தமிழ்ப் படைப்புகளுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை அளிக்கத் தவறுகிறோம். மதுரையில் வாழும் ஒரு பிரிவினரின் பேச்சு வழக்கு, வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட 'காவல் கோட்டம்" என்கிற படைப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. கொங்கு நாட்டுப் பேச்சு வழக்கில் எழுதப்படும் நாவல்களை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதேபோல நாம் ஏன் ஈழத்தமிழ் வழக்காறுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?
அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது......" சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதி இருக்கும் காலம் சென்ற தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியிருக்கும் ஒரு கருத்தை நானும் வலியுறுத்த விரும்புகிறேன்.

'தமிழகத்திலேயே அச்சிடப்பெறும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் படைப்பிலக்கியங்கள் தமிழகத்து இலக்கிய ரசிகர்களாலும் வாசகர்களாலும் மிகமிகக் குறைவாகவே விளங்கிக் கொள்ளப்படுகின்றன. சரஸ்வதி, சாந்தி காலத்தில் நிலவிய உண்மையான ஆக்க இலக்கியப் பரிமாற்றம் இப்பொழுது நடைபெறுவதே இல்லை. இந்திய அரசு நூல் நிலையங்களுக்கென வாங்கப்படும் 600 பிரதிகளுக்குள்ளே கூட இவை பெரிதும் வருவதில்லை, இதனால் இன்றைய நிலையில் நமது எழுத்துக்கள் குறிப்பாக புலம் பெயர் எழுத்துக்கள் தமிழகத்தில் தெரியப்பட வேண்டியது அவசியமாகிறது" என்கிறார் சிவத்தம்பி.
 
நெல்லைத் தமிழ் மதுரைத் தமிழ், கொங்குநாட்டுத் தமிழ். சென்னைத் தமிழ் வழக்குபோல ஈழத்தமிழ் வழக்கு மொழியும் தமிழின்பாற்பட்டதே என்கிற உணர்வுடன் நமது வாசகர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளைக் கருதி ஏற்றுக்கொள்வதுதான் முறை.
அற்புதமான பல படைப்புகளை உருவாக்கிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழிலக்கியத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பது எனது கருத்து. அந்த வகையில் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத் தொகுதியும் ஒன்று.

 
நன்றி: தினமணி (18-03-2012)                           


   

No comments:

Post a Comment