Wednesday, February 5, 2014

விமர்சனம் - முனைவர் ச.சந்திரா


கோபுர நுழைவாயில்:
இறைவனுக்கும் தொண்டருக்குமான ஆண்டான் -அடிமை உணர்வை மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல எழுத்தாணி கொண்டு நீலகண்டேஸ்வரர் ஏட்டில் எழுதியது அக்காலம்!தாய்நாட்டிற்கும் புலம்பெயர் நாட்டிற்குமான சிதை(க்கப்)பட்ட உணர்வை அகிலாண்டேஸ்வரர் எழுதியது இக்காலம்!சிதறிய  பாதரசத்தைப் புட்டியில் அடைப்பது எத்துணை கடினமோ,அதைப்போன்றதுதான் ஆங்காங்கே கிட்டிய அனுபவங்களைச் சிறுகதையாக உருமாற்றுதல்.சுய அனுபவங்கள் பசும்பொன்னாகத் துலங்க,அத்துடன் தான் சார்ந்த பிறரது அனுபவங்களையும் இணைத்து அணிகின்ற ஆபரணமாக பொலிவுறச்செய்திருக்கின்றார் அகில்.


பரவுதலும் படர்தலும்:
அதி கவனத்துடன் கதைக்கான கரு தேர்ந்தெடுப்பு, கச்சிதமாக கதையைச் சொல்லிச்செல்லும் திறம், இயல்பான கதாப்பாதிர அறிமுகம், உரையாடல்களுக்கிடையே உணர்வுகளின் இழையோட்டம்-என முகில் வானில் பரவுவது போல் நூல் முழுவதும் அகில் பரவி நிற்கின்றார்.அத்துடன் 'கூடுகள் சிதைந்தபோது'- எனும் அவரது இத்தொகுப்பை படிக்கும் வாசகர் மனதிலும் நிற்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மை!சிறுகதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆலவிதையாக ஊடுருவ,கதைக்களம் ஆலமரவிழுதுகளாய் கதை வாசிப்போர் மனதில் படர்ந்து பரவிப் பதிகின்றது.


பாதியும் மீதியும்:
அஃறிணை உயிர்நிலை பாடம் புகட்டும் கதை பாதி;உயர்திணை உறவுநிலை கற்றுத்தரும் கதை மீதி!கண்ணீரும் செந்நீருமாய், இனப்பிரச்னையும் பணப்பிரச்சினையுமாய், அடக்குமுறையும் ஒடுக்குமுறையுமாய், மோதல்களும் சாதல்களுமாய், சிதைக்கப்படுவதும் சிதைபடுவதுமாய், இடியோசையும் தடியோசையுமாய், ஊடலும் தேடலுமாய், திருந்துவதும் திருத்துவதுமாய், இரைச்சலும் புகைச்சலுமாய் இச்சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் படும்பாடு-படுத்தும்பாடு பல்வேறு உத்திகளோடு ஆசிரியரால் சொல்லிச்செல்கின்ற வேளையில் இவையெல்லாம் அவரது மெய் அனுபவங்கள்தான் என்று புரிபடுகின்றது! 


முன்னும் பின்னும்:
முதுமையின் ஏக்கத்தை, இளமையின் வேகத்தை, நட்பின் பரிபூரணத்தை, தியாகத்தின் உச்சத்தை, இழப்பின் கொடூரத்தை, பிரிவின் சுமையை,தாய்மையின் உன்னதத்தை நூலாசிரியர் இத்தொகுப்பில் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.பிராந்தியமொழியில் கதாப்பாத்திர உரையாடல் இருப்பினும் உணர்வுப்பூர்வமாக அகில் அவர்களின் நடைச் சிறப்பு உள்ளதால் ஒரே வாசிப்பில் கதை படிப்போர் மனதிற்கு புரிபடுகின்றது.பாத்திரங்கள்அனைத்துமே வாசிப்போர் மனதில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
மனதார...


ஆறறிவு உயிர்களைச் சீர்திருத்த ஐந்தறிவு உயிரான  பறவை விலங்கினங்களைக் கொண்டு கதைகள் படைத்திருக்கும் அகில் அவர்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற என்போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment